கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருங்கல்மேடு பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 26.3.2019 அன்று வரதராஜன் குன்னத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊத்துக்குளி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேம்பாலம் அருகே வரதராஜன் வந்துகொண்டிருந்தபோது கோவைபுதூர் பகுதியில் வசிக்கும் செந்தில் என்பவர் லிப்ட் கேட்டு வழி மறித்துள்ளார். அதன்பின் வரதராஜனிடம் செந்தில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.4300 மற்றும் அவருடைய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி ஓட முயன்றார்.
ஆனால் அதற்குள் வரதராஜன் சத்தம் போட்டதால் அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து செந்திலை கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து வரதராஜன் குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செந்திலை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் வழிப்பறியில் ஈடுபட்ட செந்திலுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.