இங்கிலாந்தில் இளம்பெண் ஒருவர், நீர் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு 5 வருடங்களாக அவதிப்பட்டு வருகிறார்.
உலகில் நீர் மட்டும் இல்லை என்றால் எதுவுமே இல்லை. எனவே தான் வள்ளுவர் நீரின்றி அமையாது இவ்வுலகு என்று கூறியிருக்கிறார். ஆனால் நீரே ஒரு பெண்ணிற்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. இங்கிலாந்தில் வசிக்கும் நியா செல்வே என்ற 23 வயது இளம்பெண்ணிற்கு Aquagenic Pruritus என்ற நீர் அலர்ஜியாம். இது மிகவும் அரிய வகை நோய் என்று கூறப்படுகிறது.
உடலில் நீர் பட்டாலே, அரிப்பு, வலி மற்றும் எரிச்சல் உண்டாகி அவதிப்படுகிறார். அவரின் தோல் நீர் பட்டால் உரிகிறது. இவர் பல் விலக்குவதற்கும் நீர் உபயோககிக்க மாட்டாராம். அப்போது எப்படி அன்றாட பணிகளை செய்வார்? அவர் தினசரி, படும் அவஸ்தைகளை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்.
அதாவது குளிக்கும் முன்பு, குளிக்க வைத்திருக்கும் தண்ணீரில் கிரீம்கள் சிலவற்றை கலக்குகிறார். மேலும் தன் உடலிலும் கிரீம்கள் தேய்த்துக் கொள்கிறார். அதன்பின்பு எப்படியோ வலியை தாங்கிக்கொண்டு குளிக்கிறார். உடலில் இருக்கும் நீரை உடனே உலரவைக்க ஹீட்டர் மற்றும் காற்றாடிகளை உபயோகிக்கிறார்.
அதன்பின்பு சில க்ரீம்கள் உடலில் தேய்க்கிறார் . எனினும் சிறிது நேரத்தில், எரிச்சல், அரிப்பு மற்றும் வலி உண்டாகிறது. இந்த வலியை சுமார் மூன்று மணி நேரங்கள் அனுபவிக்கிறார். இந்த நோயால் கடந்த ஐந்து வருடங்களாக அவதிப்படுவதாகவும், ஒவ்வொரு நாளும் நோயின் தீவிரம் அதிகரிப்பதாகவும் கூறுகிறார்.
இந்த நோயிலிருந்து மீள, தனியார் மருத்துவமனையில், £2,50,000 யூரோக்கள் சிகிச்சைக்காக செலவு செய்கிறார். அதற்கான நிதியை GoFundMe என்ற பெயரில் திரட்டி வருகிறார்.