கட்டிட தொழிலாளி வீட்டில் புகுந்து திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பகவதி நகர் பகுதியில் கட்டிட தொழிலாளியான முத்துபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துப்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து முத்துப்பாண்டிக்கு வேலை குறைவாக இருந்ததால் 11 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் முத்துப்பாண்டி வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின் முத்துபாண்டி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வாலிபர் ஒருவர் பீரோவின் கதவை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்து முத்துப்பாண்டி சத்தம் போட்டதால் அருகிலுள்ளவர்கள் ஓடிவந்து திருடனை சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து முத்துபாண்டி காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் திருடனைப் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தேனி மாவட்டத்திலுள்ள அள்ளிநகரில் வசிக்கும் ராமர் என்பதும், இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராமரை கைது செய்துள்ளனர்.