நாயை கவ்விய சிறுத்தையை விவசாயிகள் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சுமதி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கால்நடைகளுக்கான தீவன புல் வளர்த்து வருகின்றார். மேலும் இவரது வீடும் தோட்டமும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் வனவிலங்குகளின் தொல்லை வராமல் இருப்பதற்காக சுமதி மூன்று நாய்களை வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து சுமதி இரவு தூங்கிக் கொண்டிருந்த போது நாய்கள் குரைக்கும் சத்தம் அதிகமாக கேட்டுள்ளது.
அதன் பின் சுமதி வெளியே வந்து பார்த்தபோது சிறுத்தை நாயை கவ்வி கொண்டு இருந்ததை பார்த்து சத்தமிட்டுள்ளார். மேலும் சுமதியின் சத்தத்தை கேட்டு வந்த விவசாயிகள் பட்டாசு வெடித்தும், கூச்சலிட்டும் சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர். மேலும் சிறுத்தை கவ்விய நாயை அங்கேயே போட்டு விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து விவசாயிகள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டுள்ளனர். மேலும் விவசாயிகளிடம் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்படும் எனவும், சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.