எரி சாராயம் கடத்திய இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிறுவிடாகம் பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக சென்ற சரக்கு வேனை நிறுத்தும்படி காவல்துறையினர் சைகை காட்டினர். ஆனால் சரக்கு வேன் டிரைவர்கள் சற்று தூரத்தில் நிறுத்தி விட்டு காவல்துறையினரை கண்டதும் கீழே குதித்து தப்பி ஓடினர். அதன்பின் தப்பி ஓடிய டிரைவர்கள் விட்டு சென்ற சரக்கு வேனை காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் 100 வெள்ளைகளில் தலா 3500 லிட்டர் வீதம் எரிசாராயம் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதன்பின் காவல்துறையினர் 3500 லிட்டர் எரிசாராயம் மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சரக்கு வேனின் வாகன் பதிவு எண் சேலம் என்பதாலும், பிடிபட்ட இடம் காஞ்சிபுரம் செல்லும் கிராம குறுகிய சாலை என்பதாலும் சேலத்தில் இருந்து சென்னைக்கோ அல்லது காஞ்சிபுரத்திற்கோ எரிசாராயம் கடத்த முயற்சி செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் தப்பி ஓடிய இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.