தமிழக அரசின் உத்தரவுப்படி கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கியுள்ளது.
தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி 47 கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து கோவில் குருக்களும் ஈரோடு ஆதீனமான பாலாஜிசிவம் மற்றும் உதய பிரகாஷ் ஆகியோர் சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மன் சன்னதியில் தமிழில் அர்ச்சனை செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலிலும் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கியுள்ளது. மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அறிவிப்பு பலகையும் கோவிலில் வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறாக தமிழக அரசின் இந்த அறிவிப்பு பக்தர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.