Categories
மாநில செய்திகள்

அடக்குவதற்கு வழக்கா? ”கோபம் தான் வரும்” முஸ்லிம் லீக் வேண்டுகோள் ….!!

மணிரத்னம் உள்பட 49 பேர் மீது தொடரப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நாட்டின் சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த , பிரபலங்கள் , முக்கிய ஆளுமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அதில் , எங்களின் அன்பான நாட்டில் சமீபகாலமாக பல்வேறு சோக சம்பவங்கள் நடைபெறுவதை பார்க்கும் போது, அமைதியை விரும்பும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்ள எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது.

மேலும் நாட்டில் இருக்கும் முஸ்லிம்கள், தலித்துகள், பிற சிறுபான்மை இனத்தவர்களை கும்பல் அடித்துக் கொல்வதை சுட்டிக்காட்டிய அந்த கடிதத்தில் இந்த கொடூரங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியதோடு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்தை ஆயுதமாக்கி சிறுபான்மையினருக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் நடை பெறுகின்றன. இதை தடுக்க பிரதமர் ( நீங்கள் ) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கும்பலாகச் சேர்ந்து அடித்துக் கொல்லும் சம்பவத்தை நீங்களே நாடாளுமன்றத்தில் கண்டித்துள்ளீர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ராமர் பெயரால் சிறுபான்மையினரை பயமுறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள். கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை.கருத்து வேறுபாடு கொண்டவர்களை ‘தேசத்துக்கு எதிரானவர்கள்’ என்றும், ‘நகர நக்சல்கள்’ என்றும் முத்திரை குத்திவிடக் கூடாது” என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தை இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், உட்பட முக்கிய 49 பிரபலங்கள் எழுதி இருந்தனர்.

இந்நிலையில் இந்தக் கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில்,பிரதமர் மோடிக்கு 50 பிரபலங்கள் எழுதிய கடிதம் பிரதமரின் பணியை குறைத்து மதிப்பிடுவது போன்றும் , நாட்டின் தோற்றத்தை அவமானப்படுத்துவது போல உள்ளதால் இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி முதல் தகவலறிக்கை பதிய உத்தரவிட்டதையடுத்து இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது பொதுமக்களுக்கு தொந்தரவு செய்தல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல், அமைதியைக் குலைக்கும் வகையில் பேசுதல் தேசத் துரோகம் ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு  செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கலைத்துறையை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மணிரத்னம் உள்பட 49 பேர் மீது தொடரப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை திரும்ப பெற வேண்டும்  என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் , மத்திய அரசு அல்லது பிரதமர் மீது விமர்சனங்கள் வரும் போது அதை தாங்கிக் கொண்டு, அந்த தவறிலிருந்து தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் அதை விட்டுவிட்டு விமர்சனங்கள் செய்வோர் மீது , கேள்வி கேட்போர் மீதும் வழக்குப் போட்டு அவர்களை ஒடுக்க நினைப்பது , சர்வாதிகாரப் போக்காக அமைந்து விடும்.

மேலும் அதில் , இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் யாரையும் கேள்வி கேட்கும் உரிமை உண்டு. அப்படி கேள்வி எழும் பட்சத்தில் அதில் தவறு இல்லை என்றால் அதற்கான விளக்கத்தை கொடுப்பதுதான் நல்ல நடைமுறையாக இருக்கும். அதை தவிர்த்து வழக்குகளைக் கொண்டு அடக்கி விடலாம் என்று நினைத்தால் மக்களுக்கு மேலும் , மேலும் கோபம் வரத்தான் செய்யும் ஆகவே பழிவாங்கும் நடவடிக்கை விட்டுவிட்டு மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தொடரப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |