மத்திய அரசு தரப்பிலிருந்து அமைப்பு சாரா துறையை சார்ந்த ஊழியர்களுக்காக அடல் பென்சன் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வரை மாதாந்திர பென்ஷன் பெறலாம். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள எந்த ஒரு இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறமுடியும். இதில் பென்ஷன் பெறுவதற்கு 60 வயது வரை பங்களிப்பு செய்ய வேண்டும்.
திட்டத்தின் முதிர்வு காலத்துக்கு முன்னரே பணம் எடுக்கவோ அல்லது கணக்கை மூடவோ முடியாது. இறப்பு போன்ற சூழல்களில் மட்டுமே கணக்கை மூட முடியும். இத்திட்டத்தில் எவ்வளவு விரைவாக இணைந்து பங்களிப்பு செய்கிறோமே அவ்வளவு அதிகமாக பென்சன் தொகையும் கிடைக்கும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இத்திட்டத்தில் இணையலாம். கணவன் மனைவி இருவருமே தனித்தனியாக இத்திட்டத்தில் இணைந்து பென்சன் வாங்க முடியும். இருவருக்குமே அதிகபட்சமாக தலா 5,000 ரூபாய் என்ற விதத்தில் மொத்தம் 10,000 ரூபாய் பென்சன் கடைசி காலத்தில் கிடைக்கும்.
இதில் பென்சன் வாங்குவதற்கு ஒரு மாதத்துக்கு குறைந்தது 210 ரூபாய் பங்களிப்பு வழங்கினால் போதும். 60 வயது வரை இந்தத் தொகையைத் தொடர்ச்சியாக செலுத்தி வந்தால் ரூ.5,000 பென்சன் பெற முடியும். ஒருவேளை கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் 30 வயது ஆகியிருந்தால் இத்திட்டத்தில் இணைந்து ஒவ்வொரு மாதமும் தலா ரூ.577 டெபாசிட் செய்ய வேண்டும். மாதாந்திர பென்சன் மட்டுமல்லாமல், திட்டத்தில் இணைந்த நபர் ஒருவேளை இறந்துவிட்டால் அவரது மனைவிக்கு ரூ.8.5 லட்சம் காப்பீடு கிடைக்கும். இதுமட்டுமல்லாமல், பென்சன் தொகையும் இவருக்கு ஒவ்வொரு மாதமும் வந்துகொண்டிருக்கும்.