ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேப்பம்பாளையம் பகுதியில் பாலசுப்ரமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சவுடேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சவுடேஸ்வரன் தனது நண்பர்களுடன் புங்கம்பாடி ரயில் பாலத்தில் வைத்து பரோட்டா சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து சவுடேஸ்வரன் சிறுநீர் கழிப்பதற்காக தொலைபேசியில் பேசிக்கொண்டே தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் சவுடேஸ்வரன் திரும்ப வராததால் அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் நண்பர்கள் சவுடேஸ்வரனை தேடி சிறிது தூரம் தண்டவாளத்தில் சென்றுள்ளனர். அப்போது தண்டவாளத்தின் அருகே சவுடேஸ்வரன் பலத்த காயமடைந்து இறந்து கிடப்பதை கண்டு நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து சவுடேஸ்வரனின் நண்பர்கள் ஈரோடு ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் சவுடேஸ்வரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விசாரணையில் திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த ரயில் மோதி சவுடேஸ்வரன் இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.