தமிழகத்தில் பல மாவட்டங்களில் இறைச்சிக் கடைகளை நடத்துபவர்கள், மட்டன், சிக்கன் மற்றும் மீன் விற்பனை கடைகளில் சேரும் கழிவுகளை பொதுஇடங்களில் கொட்டி விடுகின்றனர். நீர்நிலைகள், காலியிடங்கள் சாலையோரங்கள் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் மாநகராட்சி தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் பயப்படுகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி எச்சரித்துள்ளது. அனுமதிக்கப்படாத இடங்களில் இறைச்சிக்காக ஆடு மாடு போன்றவற்றை வதை செய்தால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், தெருக்களில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் அந்த கால்நடை உரிமையாளருக்கு ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் மதுரை மாநகராட்சி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.