கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது ஏற்பட்ட நிதி நிலைமையை பற்றி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதல் அடிப்படையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் 2011 ஆம் ஆண்டு அதிமுக கட்சியின் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்த போது தமிழ்நாட்டின் கடன் ரூ.2.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்துள்ள போது அதாவது, 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது என்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வெள்ளை அறிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது: வெள்ளையறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தொடக்கப்புள்ளியா? தப்பிப்பதற்கான முற்றுப்புள்ளியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஏதேனும் காரணங்களை கூறி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலம் கடத்தாதே திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. மக்களை திசை திருப்பி அதிமுக மீது களங்கம் சுமத்த நினைப்பதாக அவர் திமுக மீது குற்றம்சாட்டியுள்ளார்.