தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் திருத்தணி முருகன் கோவிலில் இன்றும் நாளையும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதனைப்போலவே திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சோழவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.