ராமேஸ்வரத்தில் திமுக பிரமுகர் வீட்டில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
ராமேஷ்வரம் மாவட்டம் அங்காள ஈஸ்வரி கோவில் பகுதியில் உள்ள வில்லாயுதம் என்பவர் திமுகவில் மீனவர் அணி செயலாளர் பதவி வகித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட கடல் அட்டையை பதுக்கி வைத்து இலங்கைக்கு கடத்த முயன்றதற்காக ராமநாதபுரம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து முறையான வருமான வரி செலுத்தாததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் இன்று அவரின் வீட்டுக்கு சென்ற 8 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் அவரின் வீட்டுக்கு சென்று சோதனை செய்து வருகின்றனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.