எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. கொரோனா பரவலால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 2021-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 12-ம் தேதி கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 13 மாலை முதல் https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசித் தேதி ஆகும். அதேபோல நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் முறையாக 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலால் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் எண்ணிக்கையும் உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.