மன வேதனையால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் பண்டாரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு பலவேசம் என்ற மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பண்டாரம் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் பண்டாரத்திற்கு இடுப்பு பகுதியில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நீண்ட நாட்களாக பண்டாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் பண்டாரம் சிகிச்சை பெற்றும் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால் மன வேதனையில் இருந்த பண்டாரம் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து களக்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பண்டாரத்தின் சடலத்தை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.