தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்த முடிவு ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த ஆலோசனை நடந்து வருகிறது. நாளொன்றுக்கு 50% மாணவர்களை மட்டும் பள்ளியில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அரசு அறிவித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.