தொழிலாளி தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவள்ளி பகுதியில் நெசவுத் தொழிலாளியான ஞானவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் ஞானவேல், அவரின் தாயான பார்வதி மற்றும் தம்பியான பாபு ஆகிய மூன்று பேரும் இணைந்து கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள் மாவட்ட கலெக்டர் கார் நிறுத்துமிடத்தில் திடீரென உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பார்த்து அவர்களை தடுத்து நிறுத்திவிட்டனர். அப்போது ஞானவேலின் தாயான பார்வதி கீழே படுத்து உருண்டு பிரண்டு அலறி சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி விசாரித்துள்ளனர்.
அப்போது அவர்கள் தங்களின் நிலத்தை ஒருவர் அபகரிக்க முயற்சி செய்வதோடு கொலை செய்து விடுவேன் என மிரட்டுகிறார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர் அரசியல் பிரமுகர் என்பதால் அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த அந்த அரசியல் பிரமுகர் தங்களின் வீட்டிற்குச் சென்று தினமும் தொந்தரவு செய்கிறார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் தங்களின் நிலத்தை அளவீடு செய்வதற்கு வர மறுக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர். எனவே தங்களின் நிலத்தை அபகரித்த அவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுப்பதற்குக் சென்ற போது இவ்வாறு தீக்குளிப்பதற்கு முயற்சி செய்தோம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி கலெக்டரிடம் மனு கொடுப்பதற்கு அனுப்பி வைத்துள்ளனர்.