வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1,662 பருத்தி மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அக்கரைபட்டியில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஏலத்திற்கு அக்கரைப்பட்டி, மல்லசமுத்திரம், ராசபாளையம், மாமுண்டி, நத்தமேடு, மதியம்பட்டி, வெண்ணந்தூர், குருசாமிபாளையம், மின்னக்கல் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த சுரபி ரக பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து சேலம், கோவை, திருப்பூர், அவிநாசி, மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம் என பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்துகொண்டு பருத்தியை ஏலம் எடுத்து சென்றுள்ளனர். மேலும் சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக 9999 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 10,699 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டதால் வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு பருத்தி மூட்டைகள் வாங்கி சென்றுள்ளனர். அதன்படி ஏலத்தில் மொத்தமாக 1,662 சுரபி ரக பருத்தி மூட்டைகள் 60 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.