நில ஆக்கிரமிப்பில் நீதி கிடைக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அடுத்துள்ள தொட்டியபட்டியில் அமல்ராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து அந்த இடத்தில் காம்பவுண்ட் சுவர் கட்டியதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து அமல்ராஜ் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து மனமுடைந்த முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைதொடர்ந்து முதியவர் அலுவலக வளாகத்தில் மயங்கி கிடந்ததை பார்த்த காவல்துறையினர் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இட ஆக்கிரமிப்பில் நியாயம் கிடைக்கததால் முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.