ஆட்டை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி பகுதியில் பங்காரு என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் வசித்துள்ளார். மேலும் பங்காரு தோட்டத்தில் கொட்டகைகள் அமைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு 12 மணி அளவில் ஆடு, மாடுகள் கத்தும் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தைக் கேட்டு பதறி எழுந்து வந்த பங்காரு வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு ஆடு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து வனப்பகுதிக்குள் இருந்து வந்த சிறுத்தை கொட்டகைக்குள் நுழைந்து ஆட்டை கடித்து குதறி கொன்றது பங்காருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு பங்காரு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடத்தை ஆய்வு செய்துள்ளனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.