மத்திய அரசு ஊழியரிடம் இருந்து மர்ம நபர் 2 லட்ச ரூபாய் நூதன முறையில் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகரில் பாலாஜி சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணலியில் இருக்கும் மத்திய அரசு நிறுவன தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பாலாஜியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர் தான் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து வங்கி கணக்கில் கூடுதலாக தகவல்கள் சேர்க்க வேண்டும் என்று கூறி அந்த நபர் பாலாஜியின் வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டுக் கொண்டார்.
அதன் பிறகு அந்த நபரின் அறிவுரைப்படி பாலாஜி தனது செல்போனுக்கு வந்த ஓ.டி.பி எண்ணையும் அவரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 4 தவணையாக பாலாஜியின் வங்கிக் கணக்கில் இருந்து இரண்டு லட்ச ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலாஜி உடனடியாக திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மத்திய அரசு ஊழியரிடம் இருந்து 2 லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.