மின்சாரம் தாக்கி தாய், மகள், பேத்தி என மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் பிச்சுமணி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மகாலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமிக்கு சிவா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 3 வயதான அவந்திகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது.
இந்நிலையில் இடுப்பில் தனது பேத்தியை இடுப்பில் வைத்து கொண்டு வீட்டிற்கு முன்பு இருந்த கம்பி மீது இந்திரா ஈர துணிகளை காயப்போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரின் மீதும் மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இருவரின் அலறல் சதத்தை கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த மகாலட்சுமி இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கி விட்டது.
இதனையடுத்து படுகாயம் அடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.