இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் கோமா நிலைக்கு சென்ற வாலிபருக்கு இழப்பீடு வழங்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கண்டிதம்பட்டி பகுதியில் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரன்ஸ் மேரி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு சுபா என்ற மகளும், அலெக்சாண்டர், ஸ்டாலின் என்ற மகனும் இருந்துள்ளார்கள். மேலும் ஸ்டாலின் கடந்த 2015 ஆம் ஆண்டு இரு சக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு ஸ்டாலினை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்டாலின் கோமா நிலைக்கு சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பல்வேறு இடங்களில் ஸ்டாலினுக்கு சிகிச்சை அளித்தும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக 2016ஆம் ஆண்டு மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கை விசாரித்த கோர்ட் 30 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கக்கோரி உத்தரவிட்டுள்ளது. ஆனால் கோர்ட் உத்தரவிட்டும் ஸ்டாலினிக்கு இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. இது குறித்து ஸ்டாலின் உறவினர்கள் பல்வேறு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஸ்டாலின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் விபத்து தொடர்பான வழக்கு அரசு தரப்பில் நடத்தி இழப்பீடு தொகையை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.