திருமணமான பெண்களின் மீது காதல் கடிதம் வீசுவது அவர்களை அவமானப்படுத்தும் செயல் என மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை தெரிவித்துள்ளது. இதுகுறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீகிருஷ்ண தவரிக்கு 90,000 ருபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அபராதத்தில் 85,000 ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், “புகார் அளித்தவர் 45 வயதான திருமணமான பெண்.
அவர் மீதான காதலை வெளிப்படுத்தும் வகையில் கவிதைகள் நிறைந்த வசனங்களை எழுதி காதல் கடிதம் அளித்திருப்பது அப்பெண்ணை அவமானப்படுத்துவதற்கு சமம். ஒரு பெண்ணுக்கு அவரின் மானம்தான் விலைமதிப்பற்ற ஆபரணம். பெண் அவமானப்படுத்தபட்டாரா என்பதை அறிந்து கொள்ள குறிப்பிட்ட வழிமுறைகள் வகுக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட பெண் மீது கடிதம் வீசப்பட்டதற்கான ஆதாரங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை. கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்நோக்கத்துடன் செயல்பட்டது, மூத்தம் கொடுப்பது போல் செய்கை செய்தது, பெண்ணின் மீது கூழாங்கற்களை வீசுவது போன்ற செயல்களை குற்றம்சாட்டப்பட்டவர் செய்துள்ளார் என்பது தகுந்த ஆதாரங்களால் தெரியவந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.