சேப்பாக் அணிக்கு எதிரான தகுதிச்சுற்று-1 போட்டியில் வெற்றி பெற்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது .
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று தகுதிச்சுற்று-1 போட்டி நடைபெற்றது . இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் அதிரடியாக விளையாடி 82 ரன்களும் ,சதீஷ் 29 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர் .இதன் பிறகு களமிறங்கிய திருச்சி அணி 154 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் தொடக்கத்தில் திருச்சி அணி தடுமாறியாதல் 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது . இதன்பிறகு நிதிஷ் ராஜகோபாலுடன் ,ஆதித்யா கணேஷ் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் நிதிஷ் ராஜகோபால் 55 ரன்னில் ஆட்டம் இழந்தார்.கடைசி 2 ஓவர்களில் வெற்றி பெறுவதற்கு 11 ரன்கள் தேவைப்பட்டது .பரபரப்பாக நடந்த இறுதிக்கட்ட ஆட்டத்தில் 19-வது ஓவரில் 5 ரன்கள் எடுக்க, கடைசி ஓவரில் 5-வது பந்தில் திருச்சி அணி திரில் வெற்றி பெற்றது. இறுதியாக 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது .இதில்ஆதித்யா கணேஷ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் குவித்தார். இதன்மூலம் திருச்சி அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள எலிமினேஷன் சுற்றில் வெற்றி பெறும் அணி சேப்பாக் அணியுடன் 13-ஆம் தேதி மோத உள்ளது.