சென்னையில் திடிரென்று வீட்டின் அனைத்து கதவுகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டி அடுத்த நேருநகர் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர் நேற்றைய தினம் தனது மருமகள் பேரன் ஆகியோருடன் வீட்டின் அனைத்துக் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி டிவி பார்த்துக் கொண்டிருந்தார். மேலும் வீட்டின் உள் அறையில் ஏசி ஆன் செய்திருந்ததால் அந்த கதவையும் பூட்டிவிட்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று அவர் வீட்டில் இருந்த அனைத்து கதவுகளும் வெடித்துச் சிதறியது.
இதனால் பதறி துடித்த மாரிமுத்து குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு வெளியே கூட்டி வந்து நிதானப்படுத்தி பின் இச்சம்பவம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் உடன் சேர்ந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர். அதில் மாரிமுத்துவின் மருமகள் கேஸ் அடுப்பில் வெந்நீர் வைத்து விட்டு அதை மறந்து சென்றதால் அது கொதித்து தண்ணீர் வெளியேறி தீயை அணைத்து கேஸ் வெளியேறி அது நீராவியுடன் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் வேகமாக பரவியுள்ளது.
மேலும் வீட்டின் அனைத்து கதவுகளும் ஜன்னல்களும் காற்று வெளியில் செல்ல முடியாதபடி பூட்டி இருந்ததால் காற்றின் அழுத்தம் வீட்டினுள் அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் காற்று வெளியேற அழுத்தம் செலுத்திய பொழுது அனைத்து கதவுகளும் வெடித்து சிதறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தான் உண்மையான காரணமா என்றும் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு தீவிரப்படுத்தி வருகின்றனர். இது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.