பிரிட்டனில் நீண்ட நாட்களாக காலியாகக்கிடந்த ஒரு குடியிருப்பில் மனித உடல்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் இருக்கும் Toxteth என்ற பகுதியில் அமைந்திருக்கும் Wordsworth என்ற வீதியில், பல வருடங்களாக ஒரு குடியிருப்பு, ஆட்கள் வசிக்காமல் காலியாக கிடந்துள்ளது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று கட்டுமான பணியாளர்கள் அந்த குடியிருப்பில் வேலை செய்துள்ளனர். அப்போது அங்கு வித்தியாசமான ஜாடி ஒன்று இருந்துள்ளது.
அதனைத்திறந்து பார்த்த பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனுள் மனித உடலின் பாகங்கள் பதப்படுத்தப்பட்டு இருந்துள்ளது. அதன் பின்பு அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அந்த ஜாடியை ஆராய்ச்சிக்காக அனுப்பியுள்ளனர்.
மேலும், இரு நாட்களாக அந்த குடியிருப்பில் காவல்துறையினர் தடவியல் குழுவினருடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு உதவ மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வீட்டின் பக்கத்தில், டோக்ஸ்டெத் பார்க் கல்லறை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.