சந்தேகமடைந்து மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மூங்கில் ஏரி பகுதியில் கூலித் தொழிலாளியான தினேஷ் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தினேஷ் குமாருக்கும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் வசிக்கும் உமாமகேஸ்வரி என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு திருமணமான ஒரே மாதத்தில் தினேஷ் குமார் தனது மனைவியான உமா மகேஸ்வரியின் மீது சந்தேகமடைந்தால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு தினேஷ்குமாருக்கும், உமா மகேஸ்வரிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் கோபமடைந்த தினேஷ் குமார் தனது மனைவி என்று கூட பாராமல் அங்கிருந்த கொடுவாளை எடுத்து உமா மகேஸ்வரியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தினேஷ்குமார் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நீதிபதி ஜெயந்தி என்பவர் வழக்கை விசாரித்து மனைவியை கொடுவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றத்திற்காக தினேஷ் குமாருக்கு 5,000 ரூபாய் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.