இங்கிலாந்து அரசு தரப்பு வக்கீல்கள் பிரிவு நிரவ் மோடி விவகாரம் குறித்து இந்திய அரசுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
வைர வியாபாரியான நிரவ் மோடி ரூ.13 ஆயிரம் கோடியை பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்த நிலையில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் இந்தியா தொடர்ந்த வழக்கையடுத்து நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. இதையடுத்து இங்கிலாந்து உள்துறை மந்திரியும் நாடு கடத்தும் உத்தரவுக்கு அனுமதி வழங்கினார்.
ஆனால் இந்தியாவிற்கு நாடு கடத்தும் இந்த உத்தரவை எதிர்த்து நிரவ் மோடி லண்டன் ஐகோர்ட்டுக்கு மேல்முறையீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு தற்போது நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு இந்தியாவிற்கு பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அரசு தரப்பு வக்கீல்கள் பிரிவு இந்த உத்தரவு குறித்து ஆய்வு செய்வதாகவும், இந்திய அரசுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.