மகாராஷ்டிரா மாநிலத்தில் கழுதை பாலின் விலை ஒரு லிட்டர் 10 ஆயிரத்துக்கு விற்பனையாகி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உன்ன பெத்ததுக்கு நாலு எருமை மாட்டை வாங்கி வளர்த்திருக்கலாம் என்று பெற்றோர்கள் அடிக்கடி நம்மை திட்டி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இனி அவர்கள் அப்படிக் கூற மாட்டார்கள். எருமை மாட்டிற்கு பதிலாக கழுதையை தான் குறிப்பிடுவார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு கழுதை பாலின் விலை உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஒஸ்மனாபாத்தில் ஒரு லிட்டர் கழுதைப்பால் 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒஸ்மனாபாத்தில் தோத்ரா என்ற குடும்பத்தினர் தங்களின் கழுதைகளை தெருத்தெருவாக அழைத்துச் சென்று அதன் பாலை விற்பனை செய்து வருகின்றனர்.
பணக்காரர்கள் ஒரு லிட்டர் பால் அல்லது அரை லிட்டர் பாலை வாங்குகின்றனர். அதிக விலை கொடுத்து வாங்க முடியாத மக்கள் 10 மில்லி லிட்டர் பால் 100 ரூபாய்க்கு வாங்கி பருகுகின்றனர். அண்மையில் கழுதைப்பால் குறித்து தேசிய ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இந்த பாலில் உடல் பருமன், புற்றுநோய் மற்றும் ஒவ்வாமை தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய சத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளனர். கழுதை பாலில் அதிக ஊட்டச்சத்து இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.