தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் ஆகியவையும் இந்து சமய அறநிலையத் துறையின் கடமை ஆகும். இந்நிலையில் கோயிலுக்குச் சொந்தமான வீடு, கடைகளுக்கான வாடகையை செப்-1 முதல் இணையதளம் மூலம் செலுத்தும் முறை அமலுக்கு வருவதாக அறநிலையத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். குத்தகைதாரர், வாடகைதாரர் பிரதிமாதம் 10ஆம் தேதிக்குள் அந்தக் கோயில் நிர்வாகத்தை ஏற்படுத்தியுள்ள இணையதள வழியில் குத்தகை மற்றும் வாடகை தொகையை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.