டிஎன்பிஎல் டி20 போட்டியில் கோவை அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணி தகுதிச்சுற்று-2 முன்னேறி உள்ளது.
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது .அதன்படி முதலில் பேட் செய்த கோவை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக சுதர்ஷன் 40 பந்துகளில் 57 ரன்கள் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் .திண்டுக்கல் அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் பிறகு களமிறங்கிய திண்டுக்கல் அணி 144 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் தொடக்க வீரரான சுரேஷ் லோகேஷ்வர் 9 ரன்னில் வெளியேறினார்.
இதன் பிறகு களமிறங்கிய மணிபாரதி 1 ரன்னிலும் ,ஸ்ரீநிவாசன் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் .இதனால் திண்டுக்கல் அணி 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பிறகு களமிறங்கிய ஆர்.விவேக் , ஹரி நிஷாந்துடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . இதில் ஹரி நிஷாந்த் 59 ரன்களும் ,அதிரடியாக விளையாடிய விவேக் 25 பந்துகளில் 52 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் .இறுதியில் திண்டுக்கல் அணி 17.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு144 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் திண்டுக்கல் அணி தகுதிச்சுற்று-2 முன்னேறி உள்ளது. இதையடுத்து நாளை நடைபெற உள்ள தகுதிச்சுற்று-2 ஆட்டத்தில் சேப்பாக் அணியுடன், திண்டுக்கல் அணி மோத உள்ளது.