தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. கொரோனாவை விரட்டி அடிக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும் தான் என்பதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் தமிழ்நாட்டிற்கு 6,85,160 கொரோனா தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன. 5,51,800 கோவிஷில்டு தடுப்பூசிகள் மதியம் 12 மணிக்கு விமானம் மூலமும், 1,33,360 கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் சாலை மார்க்கமாகவும் சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது