கோவிலில் கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒக்ககுடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் சங்கிலி கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் செம்மங்குடி பகுதியில் வசிக்கும் ஞானஸ்கந்தன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் கோவிலுக்குப் பூஜை செய்ய வந்தபோது சங்கிலி கருப்பசாமி கோவில் கோபுரத்தில் இருந்த கலசத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதை அறிந்தார். இதுகுறித்து இந்து அறநிலையத் துறை அலுவலரான ராஜேஷ் மணிகண்டனுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுப்பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவையாறு காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளனர். ஆனால் கலசத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஆற்றங்கரையில் கோவில் அமைந்திருப்பதால் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது என தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.