தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதையடுத்து 9 ஆம் முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு சத்துணவு திட்டம் செயல்படுவதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மதிய உணவில் ரொட்டி, முட்டை வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.