ஒரே நாளில் 6700 லிட்டர் சாராய ஊறல்களை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் படி தனிப்படை காவல்துறையினர் கல்வராயன் மலை அடிவாரம் மாயம்பாடி கிராமத்தில் அமைந்திருக்கும் காப்புக்காடு மற்றும் சிங்காரா வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிங்காரா வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த 1, 500 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து தரையில் கொட்டி அழித்துள்ளனர்.
இதை போல் மதுவிலக்கு காவல்துறை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் குரும்பலூர் வனப்பகுதியில் மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்த 4,000 லிட்டர் சாராய ஊழலை கண்டுபிடித்து அதை கீழே கொட்டி அழித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ வெல்லத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தனிப்பிரிவு காவல்துறையினர் திருப்பதி வனப்பகுதியில் நடத்திய சாராய சோதனையில் மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்த 1, 200 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அவற்றை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்துள்ளனர்.