நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு நடைபெற்ற முளைக்கட்டு வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்களை திறக்க அரசு தடை விதித்திருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பக்தர்கள் விதிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் கோவில்களில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் கடந்த 1 – ஆம் தேதி முதல் 9 – ஆம் தேதி வரை கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்பாளுக்கு முளைக்கட்டு வைபவம் நடைபெற்றது. இதனால் நெல்லையப்பர் கோவிலில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் கூடுதலாக ஒரு நாள் மட்டும் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நெல்லையப்பர் கோவிலில் 10 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பக்தர்கள் நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மாள் சந்நிதியில் சமூக இடைவெளிகளை பின்பற்றி தரிசனம் செய்தனர்.
இதே போன்று திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் ஆண்டாள் தாயாருக்கு ஆடிப்பூர மஹோத்சவம் நடைபெற்றது. இந்நிலையில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து ஆண்டாளுக்கு 1,008 வளையல் அலங்காரம் மற்றும் கனிகள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு, குங்குமம் மற்றும் வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.