தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் .
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி ,வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இந்நிலையில் சீர்காழி ரயில் நிலையம் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி மாவட்ட தனிப்படை போலீசார் அறிவழகன் ,பாலச்சந்திரன் மற்றும் போலீசார் ஆகியோர் நேரில் சென்று சோதனையிட்டனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக 3 நபர்கள் அரசமரத்தடியில் சாக்கு மூட்டைகளோடு நின்று கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டனர்.
அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சாக்குமூட்டையில் 30 கிலோ ஹான்ஸ், 16 கிலோ கூல்லிப் போன்ற புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதன்பிறகு அவர்களிடமிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைதொடர்ந்து உளுத்து குப்பை வெள்ளாளர் தெருவை சேர்ந்த ஆசாத்அலி ,வைத்தீஸ்வரன் கோவில் வடக்கு வீதியை சேர்ந்த பாபு மற்றும் சீர்காழி தாடாளன் தெற்கு மடவிளாகத்தை சேர்ந்த சுப்பிரமணியன் ஆகிய மூவரையும் சீர்காழி காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றன .