நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக மே 16-ந்தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. வரும் 15-ந்தேதியுடன் முடிய இருந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்டு 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார்.
‘‘கொரோனா நிலைமை மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இருந்தாலும் 3-வது அலையின் ஆபத்து இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உள்ளூர் ரெயில்களை நாங்கள் அனுமதிக்காததற்கு இதுவும் ஒரு காரணம்’’ என்று செய்தியாளர் சந்திப்பில் மம்தா கூறினார். “மாநிலத்திற்கு தேவையான அளவு தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. மக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் ஊசி செலுத்தப்பட்டால்தான், ரெயில்களை அனுமதிக்க முடியும்” என்றும் மம்தா குறிப்பிட்டார்.