ஈரான் நாட்டின் வான் பாதுகாப்பு அமெரிக்காவிற்கு சொந்தமான ஆளில்லா விமானத்தின் மீது எச்சரிக்கும் விதமாக துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் இரு நாடுகளுக்குமிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக தெரிவித்ததோடு மட்டுமின்றி ஈரான் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளார்.
அதிலிருந்தே இரு நாடுகளுக்குமிடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே அமெரிக்காவிற்கு சொந்தமான MQ-9Reaper என்னும் ஆளில்லா விமானம் பறந்துள்ளது.
இதனை எச்சரிக்கும் விதமாக ஈரானின் வான் பாதுகாப்பு அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தின் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளது. இந்த தகவலை ஈரான் நாட்டின் ஊடகம் வெளியிட்டுள்ளது. இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை மென்மேலும் அதிகரித்துள்ளது.