சுதந்திர தினத்தை முன்னிட்டு வருடம் தோறும் நடைபெறும் கல்லூரி மற்றும் பள்ளி நிகழ்ச்சிகள் இந்த வருடம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலக கோட்டையான கொத்தளத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று தேசியக் கொடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்றி வைக்க இருக்கிறார். இதனையடுத்து ஆண்டுதோறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகள், பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என பலர் பங்கெடுப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் கொரோனா தோற்றால் பாதிப்பு ஏற்படா வண்ணம் இந்த வருடம் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து சுதந்திர போராட்டத்தின் வீரர்கள் வயதில் மூத்தவர்களாக இருக்கின்றனர். அதனால் கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அதிகாரிகள் மூலமாக பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பின்னர் சுதந்திர தின நிகழ்ச்சிகளை வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் விதமாக இந்த வருடம் மாணவர்கள், பள்ளி குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் போன்றோர் விழாவை காண நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.