ரஷ்ய நாட்டிற்காக உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரிட்டனை சேர்ந்த நபர் கைதான புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
பிரிட்டனைச் சேர்ந்த 57 வயதான டேவிட் ஸ்மித் என்ற நபர் ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் இருக்கும் பிரிட்டன் தூதரகத்தில் செக்யூரிட்டி கார்டாக வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து ரஷ்யாவின் உளவுத்துறைக்கு, ரகசியமாக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்டார்.
அவர், இதற்கு முன்பு பிரிட்டனில் விமானப்படையில் பணியாற்றி இருக்கிறார். உக்ரைன் நாட்டில் ஒரு பெண்ணை திருமணம் செய்து, ஒரு மகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் இவர், மனைவியை பிரிந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த நபர் முக்கியமான ஒரு ஆவணத்தை ரஷ்ய உளவுத் துறைக்கு கொடுத்து, அதற்காக அதிக பணம் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் உளவுத்துறை இவரை கண்காணித்து வந்ததை அறியாமல் இருந்த ஸ்மித் வசமாக மாட்டியுள்ளார். தற்போது வரை ஸ்மித்தின் புகைப்படம் எந்த செய்தியிலும் வெளிவரவில்லை. இந்நிலையில் தற்போது அவரின் வீட்டிலிருந்து அவரை கைது செய்து அழைத்து சென்ற புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கமாக, ஜெர்மனியில் எவரையும் கைவிலங்கு போட்டு கைது செய்வதில்லை. ஆனால் இவரை கைவிலங்கிட்டு கைது செய்ததால், அதனை ஒரு பெண் புகைப்படம் எடுத்திருக்கிறார். மேலும் அவரின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்ததில் ரஷ்யாவின் கொடியும், சோவியத் ராணுவ அதிகாரிகளின் தொப்பியும் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.