வேப்பமரத்தின் அடியில் நிறுத்தியிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் பால்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மாமனாரான ராமச்சந்திரனின் தோட்டம் திசையன்விளை பகுதியில் உள்ளது. அந்த தோட்டத்தை பால்சாமி குத்தகைக்கு எடுத்துள்ளார். தற்போது அந்த தோட்டத்தில் கோத்தகிரி பகுதியில் வசிக்கும் ராமன், லட்சுமணன், உள்ளமுடையார், நாராயணன் ஆகியோர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் ஓட்டி வந்த 4 மோட்டார் சைக்கிள்களை அங்கிருந்த வேப்பமரத்தின் அடியில் நிறுத்தியிருந்தனர்.
அதன் பின் 4 பேரும் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளை வந்து பார்த்தனர். அப்போது அந்த 4 மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அருகில் உள்ள சொட்டுநீர் குழாயும் தீயில் கருகி நாசமாகி இருந்தது. இதுகுறித்து பால்சாமி திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார்சைக்கிள்களை மர்ம கும்பல் தீ வைத்து சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.