கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் முதல் அலையை காட்டிலும், இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாட்டில பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஆக்சிஜன், படுக்கை வசதி இல்லாமல் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இவை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் மக்கள் இவற்றை பயன்படுத்திக்கொண்டு பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர்.
கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்ற தவறுகின்றனர். தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 10 நாட்களில் மட்டும் 499 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து குழந்தைகளை முறையாக கண்காணிப்பது மட்டுமின்றி, கூட்டமான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்துவது, பள்ளிகளை திறப்பதை ஒத்தி வைப்பது குறித்து கர்நாடக மாநிலத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.