ஆசிரியரிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் பிச்சாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் மாசாபேட்டை அண்ணாநகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மதிய நேரத்தில் செல்வி பள்ளியில் இருந்து வீட்டிற்கு சாப்பிட நடந்து சென்று கொண்டிருந்தார். அதன்பின் சிறிது நேரம் கழித்து மீண்டும் பள்ளிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் தலையில் கைக்குட்டை கட்டிக்கொண்டு மற்றும் முகக்கவசம் அணிந்து கொண்டு வந்த 3 பேர் செல்வியின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி மற்றும் தாலிச்சரடு உள்ளிட்ட 15 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து செல்வி ஆற்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.