தமிழக அரசின் நேற்றைய பட்ஜெட் கூட்டத்தொடரை அதிமுக புறக்கணித்து வெளிநடப்பு செய்தது.
பட்ஜெட் தாக்குதலுக்கு முன்பு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேச சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்பட்டதால் பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நேற்று காலை சட்டப்பேரவை கூடியதும் மக்கள் சார்ந்த பிரச்சனை குறித்து பேச அனுமதி கோரி எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி முற்பட்டார். அவருக்கு அனுமதி வழங்கப்படாததை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி நடைமுறைப் படுத்த முடியாத திட்டங்களை அறிவித்து திமுக ஏமாற்றிவிட்டது என்று குற்றம்சாட்டினார்.ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை என்று அவர் சாடினார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று விடியா அரசு மாணவர்களை குழப்பி விட்டதாகவும் விமர்சித்தார்.
சுய விளம்பரம் தேடும் முயற்சியாக திமுக நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். பொய் வழக்குகளுக்கு அஞ்சமாட்டோம் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உண்மைக்கு புறம்பாக வழக்குகளை போட்டு பலி வாங்கும் எண்ணத்தோடு திமுக அரசு செயல்படுவதாகவும் சாடினார்.
மூச்சுக்கு முன்னூறு தடவை பத்திரிக்கை சுதந்திரம் பற்றி ஸ்டாலின் பேசிவரும் நிலையில் நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தில் அத்துமீறியதற்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம் தெரிவித்தார். பத்திரிகை சுதந்திரத்தை திமுக அரசு காலில் போட்டு நசுக்கி விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.