ஊராட்சி மன்ற தலைவரை குற்றம் சாட்டி துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியில் முட்டஞ்செட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக கமலபிரியா என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவர் முட்டஞ்செட்டியில் குடிநீர் இணைப்பிற்கு அரசு நிர்ணயித்த தொகையை விட 2,000 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும், 165 குடிநீர் இணைப்புகளுக்கு பணம் வாங்கி விட்டு 25 பேருக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊராட்சி மன்ற துணை தலைவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு பராமரிப்பு, சாக்கடை சுத்தம் செய்தல், சீரான குடிநீர் என்பது உள்ளிட்ட பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் முறையாக செய்யவில்லை என தெரிவித்துள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை தலைவர் சபாரத்தினம் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் குணாளன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். இதற்குபின்னரே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.