கணவன்-மனைவி தகராறில் மதுபோதையில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள காந்திநகர் காலனியில் முன்னாள் ராணுவ வீரரான நடராஜன் வசித்து வந்துள்ளார். இவரது 4 மகளுக்கும் திருமணம் முடிந்து விட்ட நிலையில் நடராஜன் மற்றும் அவரது மனைவி சாந்தி தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நடராஜன் குடி பழக்கத்திற்கு அடிமையாகிய நிலையில் அடிக்கடி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று நடராஜன் வழக்கம்போல குடித்துவிட்டு மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த நடராஜன் சாந்தியின் கழுதை சேலையால் நெரித்துள்ளார். இதில் சாந்தி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நடராஜன் உடனடியாக மனைவியை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சாந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சாந்தி உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளதாக நடராஜன் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சந்தேகமடைந்த சாந்தியின் சகோதரர்கள் சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடராஜனை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் மது போதையில் நடைபெற்ற தகராறில் சாந்தியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் நடராஜன் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.