பணம் தர மறுத்ததால் தந்தை என்றும் பாராமல் அடித்து கொலை செய்து நாடகமாடிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெள்ளிகுட்டை பகுதியில் காளியப்பன் என்ற முதியவர் அவருடைய விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 6ஆம் தேதி மர்மமான முறையில் கொட்டகையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பள்ளிபாளையம் காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு உடற்கூராவிர்க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து பரிசோதனை முடிவில் காளியப்பனை அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது காளியப்பன் மகன் சோமசுந்தரத்திடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர் நடத்திய கிடுக்கிபிடி விசாரணையில் உண்மை சம்பவம் அம்பலமாகியுள்ளது. கடந்த 4ஆம் தேதி காளியப்பனிடம் சோமசுந்தரம் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சோமசுந்தரம் அவரது நண்பரான கேசவனுடன் இணைந்து தந்தை என்றும் பாராமல் காளியப்பனை அடித்து கொலை செய்துள்ளார். மேலும் கொலை செய்துவிட்டு சந்தேகம் வராமல் இருக்க சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளார். இதனையடுத்து சோமசுந்தரத்தை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள கேசவனை தேடி வருகின்றனர். இச்சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.