இதுவரை மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை பிரித்தானியா அரசு வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு எதிராக மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மிகப் பெரியளவில் பிரித்தானியா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பினும் இறப்பு எண்ணிக்கை குறைவாகவுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் பிரித்தானியா அரசு ஒரு குறிக்கோள் வைத்து தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதில் முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி வரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கையானது 4,72,54,399 ஆகும். இதில் 89.3% முதியவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதனை அடுத்து இரண்டு தவணை தடுப்பூசி பெற்ற 4,03,72,981 பேர்களில் 76.3% முதியவர்கள் ஆவர். இதன் படி மொத்தம் பிரித்தானியாவில் 8,76,27,380 பேருக்கு முழுமையாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அரசாங்கப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் 3,96,45,073 பேருக்கும், வேல்ஸில் 23,10,898 பேருக்கும், ஸ்காட்லாந்தில் 40,50,011 பேருக்கும், வடக்கு அயர்லாந்தில் 12,48,417 பேருக்கும் முதல் தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது தவணை தடுப்பூசியானது இங்கிலாந்தில் 3,36,95,859 பேருக்கும், வேல்ஸில் 21,32,116 பேருக்கும், ஸ்காட்லாந்தில் 34,31,062 பேருக்கும், வடக்கு அயர்லாந்தில் 11,13,944 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பிரித்தானியாவில் குறிப்பிட்ட தனியார் தடுப்பூசி நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் பைசர்/பயோஎண்டேக் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி முதலும், ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனெகா கடந்த ஜனவரி 4 தேதி முதலும், மடார்னா கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி முதலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் 2021 க்குள் அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.